We believe in Truth

2024 ஜனவரி 6, சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும்‘ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான்’ பவர்டு பை சென்னை ரன்னர்ஸ்

2024 ஜனவரி 6, சனிக்கிழமையன்று நடைபெறவிருக்கும்
‘ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான்’ பவர்டு பை சென்னை ரன்னர்ஸ்

சென்னை, 21 டிசம்பர் 2023: சென்னையைச் சேர்ந்த உலகளாவிய மென்பொருள் சேவை நிறுவனமான ஃபிரெஷ்ஒர்க்ஸ் இன்க் – Freshworks Inc. (NASDAQ: FRSH) மற்றும் தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து, ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 நிகழ்வின் 12-வது பதிப்பு நடைபெறவிருப்பதை இன்று அறிவித்திருக்கின்றன. 2006-ம் ஆண்டிலிருந்து பேரார்வமும், அர்ப்பணிப்பும் கொண்ட மாரத்தான் ஓட்ட வீரர்கள் – தன்னார்வலர்களால் லாபநோக்கின்றி நடத்தப்படும் ஒரு அமைப்பாக தி சென்னை ரன்னர்ஸ் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2024 ஜனவரி 6 சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட திட்டமிடப்பட்டிருக்கும் இம்மாரத்தான் நிகழ்வில் 22,000-க்கும் அதிகமான நபர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தீவிர முனைப்புடன் கூடிய போட்டியாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஓட்டத்தில் தீவிரம் காட்டும் ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் இப்பங்கேற்பாளர்களுள் உள்ளடங்குவர்.

சென்னை ரன்னர்ஸ் – ன் ஆதரவோடு விரைவில் நடைபெறவுள்ள தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, நீண்டதூரத்திற்கு சாலைகளில் நடத்தப்படும் ஓட்ட நிகழ்வுகளது அமைப்பாளர்களின் ஒரு உலகளாவிய முதன்மை அமைப்பான AIMS (சர்வதேச மாரத்தான் மற்றும் தூர (distance) ரேஸ்களுக்கான சங்கம்) என்ற அமைப்பால் சான்றளிக்கப்படும். சென்னை மாரத்தான் 2024, ஒரு தகுதியாக்க நிகழ்வாக அபாட் வேர்ல்டு மாரத்தான் மேஜர்ஸ் என்பதன் அங்கீகாரத்தையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் என்பது சென்னை மாநகரில் நடைபெறுகின்ற மிகப்பெரிய ஓட்ட நிகழ்வாகும் மற்றும் இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய மாரத்தான் நிகழ்வு என்ற பெருமையையும் இது கொண்டிருக்கிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக மொத்தத்தில் நான்கு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இம்மாரத்தானில் முதன்மை ரேஸான முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் – (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என்பவையே இம்மாரத்தான் தொகுப்பில் உள்ளடங்கிய நான்கு ஓட்ட நிகழ்வுகளாகும்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் ஓட்ட நிகழ்வில் பங்கேற்பவர்களுள் 35%-க்கும் அதிகமானவர்கள் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரேஸ் நிகழ்வுகளில் பார்வைத்திறன் பாதிப்புள்ளவர்கள், பிளேடு ரன்னர்கள் மற்றும் வீல்சேர் ரன்னர்களும் பங்கேற்கவிருக்கின்றனர் என்பது இன்னும் சிறப்பான செய்தியாகும்.

தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, பவர்டு பை சென்னை ரன்னர்ஸ், சென்னை மாநகரத்தையே அதிரடியாக அதிர வைக்க முழு தயார் நிலையில் இருக்கிறது. முழு மாரத்தான் போட்டியானது, வரலாற்றுச் சிறப்பு மிக்க மெரினா கடற்கரை பாதை வழியாக நேப்பியர் பாலத்திலிருந்து தொடங்கி, அழகான கடற்கரை பாதையில் கலங்கரை விளக்கத்தை சென்றடையும். அதன்பிறகு இது, மத்திய கைலாஷ், டைடல் பார்க் ஆகியவற்றைக் கடந்து கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்றடையும். முந்தைய ஆண்டைப்போலவே இந்த ஆண்டு நடைபெறும் மாரத்தான் நிகழ்வுகள் நேப்பியர் பாலம் மற்றும் எலியட்ஸ் கடற்கரை என்ற இரு தொடக்க முனைகளை கொண்டிருக்கும். முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்ஃபெக்ட் 20 மைலர் (32.186 கி.மீ), மற்றும் 10 கி.மீ. ஓட்டம் ஆகியவை நேப்பியர் பாலத்திலிருந்து ஆரம்பமாகும். எலியட்ஸ் கடற்கரை, அரை மாரத்தான் (21.097 கி.மீ) நிகழ்வு தொடங்கும் இடமாக இருக்கும். இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், முழு மாரத்தான் பெர்ஃபெக்ட் 20 மைலர் மற்றும் அரை மாரத்தான் 10 கி.மீ. ஆகிய போட்டிகள் நிறைவடையும் முனையாக இருக்கும். 10-கி.மீ. ஓட்ட நிகழ்வுக்கு CPT IPL மைதானம், போட்டி நிறைவடையும் இறுதி முனையாக இருக்கும்.

முந்தைய பதிப்பைப் போலவே, இந்த ஆண்டும் தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024, பவர்டு பை சென்னை ரன்னர்ஸ், வகை 1 நீரிழிவு நிலை மீது விழிப்புணர்வை அதிகரிப்பதை இலக்காக கொண்டிருக்கும். நீரிழிவு மேலாண்மைக்காக இன்சுலின் தேவைப்படும் நபர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12000 முதல் ரூ.18000 வரை இன்சுலின் செலவுகளுக்காக பணம் தேவைப்படுவதால், இத்தகைய நபர்களின் இந்த மாதாந்திர நிதிச்செலவை எதிர்கொள்வதற்கான நிதி ஆதாரத்தை திரட்டுவதும் இந்த மாரத்தான் நிகழ்வின் மற்றொரு முக்கிய நோக்கமாகும்.

இந்நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் பார்ட்னர்கள்
தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 பவர்டு பை சென்னை ரன்னர்ஸ், சென்னையை அடித்தளமாக கொண்ட பல பிரபல பிராண்டுகளை பார்ட்னர்களாக ஒருங்கிணைக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். லைஃப் ஸ்டைல் பார்ட்னராக பாஷ்யம், சில்வர் பார்ட்னராக சுந்தரம் ஃபைனான்ஸ் குரூப், மெட்ரோ பார்ட்னராக சென்னை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மருத்துவ பார்ட்னராக அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் மற்றும் முதல் பதில்வினை செயற்பாட்டாளர்களாக சிஆர் வாலன்ட்டியர்ஸ் ஆகியவை இந்நிகழ்வில் இணைந்திருக்கும். மாரத்தான் நிகழ்வில் தாகத்தை தீர்க்கும் பார்ட்னராக லிம்கா ஸ்போர்ட்ஸ் மற்றும் மாரத்தான் நிகழ்வில் எரிபொருள் பார்ட்னராக யுனிவெட் இடம்பெறுகின்றன.

இந்த மாரத்தான் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்க உறுதியளித்திருக்கும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, தாம்பரம் காவல்துறை ஆணையரகம், தமிழ்நாடு அத்லெட்டிக் அசோஷியேஷன், சென்னைவாழ் மக்கள் மற்றும் ஓட்ட செயல்பாடுகள் மீதும், உடற்தகுதி மீதும் பேரார்வம் கொண்டிருக்கும் சென்னையின் துடிப்பான ஓட்ட வீரர்கள், ஆர்வலர்களை உள்ளடக்கிய சமூகத்தினர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியோருக்கு இம்மாரத்தான் நிகழ்வின் அமைப்பாளர்கள் நன்றியினை தெரிவிக்கின்றனர்.

தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 நிகழ்வு, கழிவுகளையே உருவாக்காத ஒரு மாரத்தான் போட்டி நிகழ்வாக இருக்கும். இதற்காக கழிவுகள் மறுசுழற்சி மற்றும் கழிவு தணிக்கைகளுக்கான பார்ட்னராக அர்பஸர் சுமீத் அமைப்பு செயல்படும்.

ஃபிரெஷ்ஒர்க்ஸ் சென்னை மாரத்தான் 2024 – பவர்டு பை சென்னை ரன்னர்ஸ் – ன் ரேஸ் இயக்குனர் திரு. V.P. செந்தில் குமார் இதுபற்றி கூறியதாவது: “நாடெங்கிலும் புகழ்பெற்ற தி ஃபிரெஷ்ஒர்க்ஸ் மாரத்தான் – ன் 12-வது பதிப்பு சிறப்பாக நடைபெறவிருப்பதை அறிவிப்பதில் சென்னை ரன்னர்ஸ் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொள்கிறது. முந்தைய ஆண்டு பதிப்பின் அடிப்படையில் அதனை மேலும் சிறப்பாக நடத்தும் நோக்கத்தோடு இன்னும் அதிக உற்சாகமூட்டும் அனுபவத்தை வழங்க நாங்கள் தயாராகிவருகிறோம். இந்நகரிலும் மற்றும் உலகளவிலும் மறக்க இயலாத சிறப்பான முத்திரையை இந்நிகழ்வு நிச்சயம் உருவாக்கும் என்று நம்பலாம். கடந்த பல ஆண்டுகளாகவே இந்நிகழ்வு அதன் அந்தஸ்திலும், மதிப்பிலும் வளர்ச்சியடைந்து இந்நாட்டில் சிறப்பாக நடத்தப்படும் முதன்மையான மாரத்தான் நிகழ்வாக தனது இடத்தை வலுவாக நிலைநாட்டியிருக்கிறது. அபாட் வேர்ல்டு மாரத்தான் மேஜர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய அங்கீகாரம் இதற்கு சிறந்த சாட்சியமாகும். 2024 அபாட் WMM வாண்டா வயது பிரிவு வேர்ல்டு சேம்பியன்ஷிப் நிகழ்வு உடனடியாக அழைப்பிதழைப் பெறுவதற்கு அந்தந்த வயதுப் பிரிவுகளுக்கான தானியக்க தகுதிகாண் நேரத்தில் ஓட்டத்தை முடிக்கும் வீரர்களை இந்த கௌரவமிக்க மாரத்தான் நிகழ்வு தகுதியினை வழங்குகிறது”.

ஃபிரெஷ்ஒர்க்ஸ் – ன் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. கிரிஷ் மாத்ருபூதம் பேசுகையில், “சென்னை மாரத்தான் போன்ற பெரு மதிப்புமிக்க அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் ஃபிரெஷ்ஒர்க்ஸ் பெருமைகொள்கிறது. உலகெங்கிலுமிருந்து மிக அதிக எண்ணிக்கையில் ஓட்ட வீரர்கள் பங்கேற்புடன் இம்மாநகரின் புகழ்பெற்ற, சிறந்த அமைவிடங்கள் வழியாக மாரத்தான் போட்டிகளில் ஓடுவது ஃபிரெஷ்ஒர்க்ஸ் – ல் பணியாற்றும் எங்கள் அனைவருக்கும் சிறப்பான மகிழ்ச்சி உணர்வையும், பெருமிதத்தையும் வழங்கும் என்பது நிச்சயம். உடற்தகுதியை தங்களது தினசரி செயல்பாட்டின் ஒரு அங்கமாக அமைத்துக்கொள்ள ஒவ்வொருவரும் ஆர்வமுடன் முன்வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த மாரத்தான் நிகழ்வுக்காக பயிற்சியினை மேற்கொள்வது உடற்தகுதி செயல்பாட்டை தொடங்குவதற்கு ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும் என்பது உறுதி,” என்று குறிப்பிட்டார்.

மேலதிக தகவல்களுக்கு: https://thechennaimarathon.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *