We believe in Truth

HCAI கார் கண்காட்சி நிகழ்வில்அரிதான, பழங்கால கார்களை காண குவிந்த மக்கள்

HCAI கார் கண்காட்சி நிகழ்வில்
அரிதான, பழங்கால கார்களை காண குவிந்த மக்கள்

சென்னை, 2023, ஆகஸ்ட் 27 : தி ஹிஸ்டாரிக்கல் கார்ஸ் அசோசியேஷன் இந்தியா (HCAI), சென்னையின் ஓல்டு மெட்ராஸ் சாலையில் ஹோட்டல் துரியா வளாகத்தில் ராயலா டெக்னோ பார்க் அமைவிடத்தில் அகில இந்திய அளவிலான பழங்கால மற்றும் கிளாசிக் கார் கண்காட்சி நிகழ்வை இன்று ஏற்பாடு செய்து நடத்தியது. பெருநகர சென்னையின் காவல்துறை ஆணையர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ், இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அழகான, பழங்கால கார்களை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் அதிகமான மக்கள் இக்கண்காட்சிக்கு வருகை தந்து, கார்களின் உரிமையாளர்களோடு அவைகளின் வரலாறு பற்றி அறிய ஆர்வத்தோடு கலந்துரையாடினர். மொத்தத்தில் 56 பழங்கால கார்களும் 12 இருசக்கர வாகனங்களும் இக்கண்காட்சி நிகழ்வில் இடம்பெற்றிருந்தன. ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லேஸ் மற்றும் ஜாகுவார்ஸ், ஆஸ்டின், மெர்சிடஸ், ஜீப்ஸ், ஃபோர்டு மஸ்டாங்ஸ் ஆகிய உலகளவில் பிரபலமான வெளிநாட்டு பிராண்டுகளும் மற்றும் பழங்காலத்தில் இந்தியாவில் மிகப் பிரபலமான கிளாசிக் கார்களான அம்பாசிடர் மற்றும் ஃபியட் கார்களும் இவற்றுள் சிலவாகும்.

2017-ம் ஆண்டிலிருந்தே மெட்ராஸ் (சென்னை) வாரம் கொண்டாடப்படும் காலத்தில் சென்னையில் இந்த பழங்கால (விண்டேஜ்) கார் கண்காட்சி நிகழ்வை HCAI நடத்தி வந்திருக்கிறது. இந்த ஆண்டு நிகழ்வை இன்னும் பெரியதாக அகில இந்திய அளவிலான பழங்கால கார் கண்காட்சியாக HCAI ஏற்பாடு செய்திருந்தது. டெல்லியின் HMCI, மும்பையின் VCCCI, கொல்கத்தாவின் EIMG மற்றும் பெங்களுருவைச் சேர்ந்த KVCCCI ஆகிய விண்டேஜ் கார்களது கிளப்புகள் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தன.

பழங்கால கார்களின் அழகான ரோடு ஷோ நிகழ்வை மாநகர சென்னை போக்குவரத்து காவல்துறையோடு சேர்ந்து HCAI மிக நேர்த்தியாக நடத்தியது. சாலைப்போக்குவரத்து குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். பொருளாதார ரீதியாக வசதியற்ற நபர்களுக்கு, தொழில் திறன்களை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, அதனை ஊக்குவிக்க வேண்டுமென்ற குறிக்கோளோடு, தி ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ், இந்த கண்காட்சி மற்றும் ரோடு ஷோ நிகழ்வில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தது.

பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் இந்நிகழ்வில் கூறியதாவது, ‘‘இந்த பழங்கால, கிளாசிக் கார்களை இத்தகைய நல்ல நிலையில் இத்தனை ஆண்டுகளாக பராமரித்து வரும் இக்கார் உரிமையாளர்களின் சிறப்பான முயற்சிகளை நான் மனமார பாராட்டுகிறேன். இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பழங்கால கார்களை பார்ப்பதற்காக இவ்வளவு வருகையாளர்களை குவிந்திருப்பதால், சாலையில் வாகனங்களை கவனமாகவும், விதிகளை பின்பற்றியும் ஒட்ட வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக்கொள்வதற்கு எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும். சாலைப்போக்குவரத்து என்பது மிக முக்கியம். சாலைகளில் நீங்கள் வாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் பாதுகாப்பை கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் HCAI சங்கத்தை நான் வாழ்த்துகிறேன்.’’

இந்நிகழ்வில் HCAI-ன் தலைவர் திரு. ரஞ்சித் பிரதாப் பேசுகையில் கூறியதாவது, ‘‘இந்தியாவில் பழங்கால கார்களின் ஆர்வலர்களது சமூகம், நீண்டகாலமாகவே இத்தகைய ஒரு மாபெரும் கண்காட்சி நிகழ்வை நடத்த திட்டமிட்டிருந்தது; கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அது தாமதமாகி இருந்தது. மேற்கு மற்றும் வடஇந்திய பிராந்தியங்களில் நிகழ்ந்த பெரும் மழை மற்றும் வெள்ளம் ஏற்படுத்திய சிரமங்கள் மற்றும் பல தடைகளை மீறி, இந்த இரு பிராந்தியங்களிலிருந்து ஏறக்குறைய 20-க்கும் அதிகமான கார்கள் இந்நிகழ்வில் பங்கேற்றிருப்பது மனநிறைவு அளிக்கிறது. மிக அரிதான கிளாசிக் கார்கள் சில இன்றைய கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அணிவரிசையில் மிகப் பழமையான காராக 1926-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட எனது T Ford காரும் இடம்பெற்றிருக்கிறது. HCAI மற்றும் அதன் அமைப்பு குழு இத்தகைய மாபெரும் நிகழ்வை நடத்துவது இவ்வகையினத்தில் இது முதல்முறையாகும். தென்னிந்தியாவின் பிற முக்கியமான அமைவிடங்களிலும் நடைபெறும் ஒரு வருடாந்திர நிகழ்வாக இது இனி நிகழும் என்பது எனது நம்பிக்கை.’’

HCAI-ன் செயலர் திரு. V.S. கைலாஷ் பேசுகையில், ‘‘இந்தியா முழுவதிலுமிருந்து பங்கேற்புடன் இத்தகைய மாபெரும் கண்காட்சி நிகழ்வு நடைபெறுவது இதுவே முதல்முறை. எமது சங்கத்தின் உறுப்பினர்களது பேரார்வம் பிரம்மிக்கச் செய்திருக்கிறது. ஏறக்குறைய 50-100 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட இந்த அழகான கார்களை காண மக்கள் மிக அதிக எண்ணிக்கையில் இங்கு வந்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு நீங்கள் காண்கிற ஒவ்வொரு காரும் சாலையில் இயக்கக்கூடிய திறன்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பழங்கால கார்களின் பெருமைமிகு உரிமையாளர்களால், பெரும் அக்கறையுடன் அதிக பொருட்செலவில் மிகவும் சிரமத்துடன் தயாரிக்கப்பட்டபோது இருந்த அதே நிலைக்கு இக்கார்கள் சீரமைக்கப்பட்டிருக்கின்றன’’ என்று குறிப்பிட்டார்.

HCAI-ன் துணைத்தலைவர் திரு. ராஜேஷ் அம்பால் கூறியதாவது, ‘‘இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இந்த கார்கள் அனைத்தும், இந்தியாவெங்கிலுமுள்ள மிகப் பிரபலமான குழுமங்களுக்கு சொந்தமானவை. இக்கார்களது உரிமைத்துவ நிலையானது, தலைமுறைகளை கடந்த ஒரு மாற்றத்தை இப்போது அவை சந்தித்து வருகின்றன. உங்களது பெற்றோர்களை நீங்கள் எப்படி அக்கறையோடு மதிப்பீர்களோ அதைப்போல இந்த பழங்கால தொன்மையான கிளாசிக் கார்களின் மதிப்பு பேண வேண்டுமென்று இக்கார்களது உரிமையாளர்கள் ஒவ்வொருவரையும் நான் வலியுறுத்தி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். சென்னை மாநகரத்தில் அகில இந்திய பங்கேற்புடன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்ய முடிந்தது. எங்களுக்கு பெரும் உற்சாகம் அளிக்கிறது. இந்நிகழ்விற்கு கிடைத்திருக்கும் வரவேற்பும் மிகச்சிறப்பானதாக இருப்பது எங்களை மேலும் ஊக்குவிக்கும்.’’

2023, ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு விண்டேஜ் (பழங்கால கார்களின்) பேரணியை HCAI ஏற்பாடு செய்து நடத்துகிறது. ரேடிஷன் ஹோட்டலின் ஒத்துழைப்போடு ஜிஆர்டி குழுமம் இந்த கார்களின் பேரணியின் ஸ்பான்சராக திகழ்கிறது. பாண்டிச்சேரியிலுள்ள ரேடிஷன் ஹோட்டலில், 2023 ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று இப்பேரணியில் பங்கேற்கும் பழங்கால மற்றும் கிளாசிக் கார்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

திரு. நிதின் தோஷா, திரு. விவேக் கோயங்கா, திரு. மதன் மோகன், திரு. டில்ஜிட் டைட்டஸ் மற்றும் திரு. பூனாவாலா உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து முதன்மையான பழங்கால மற்றும் கிளாசிக் கார்கள் புரவலர்கள் / சேகரிப்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றது இதன் சிறப்பை மேலும் உயர்த்தியது. தென்னிந்தியாவிலிருந்து, பெங்களுரு, பாலக்காடு, கோயம்புத்தூர் மற்றும் கொச்சி ஆகிய பிரபல நகரங்களின் கார் கிளப்புகளும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளன. வடபழனியில் அமைந்திருக்கும் மிக பிரபலமான ஏவிஎம் கார் மியூசியத்தை பார்வையிடுவதற்கான ஒரு விஜயத்தோடு இந்நிகழ்வு வெற்றிகரமாக நிறைவடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *